சென்னை: சென்னை நந்தனம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் தற்போதைய நிலை குறித்து, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார். குடியிருப்பு உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போதைய நிலை மற்றும் மறுகட்டுமானத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் குடியிருப்பு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன், மேலாண் இயக்குநர் சுங்சோங்சம் ஜடக் சிரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "நந்தனம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 48 வீடுகள் உள்ளன. முதலமைச்சர் உத்தரவின்படி ஆய்வு நடத்தப்பட்டது. குடியிருப்பு மிகவும் மோசமாக உள்ளது, மறுகட்டுமானம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பத்தாயிரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, விரைவில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளது. ஐந்தாயிரம் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளது, அதை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்து, வீடுகள் விற்பனை செய்யப்படும்.
சென்னை தவிர பிற நகரங்களில் பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை வீட்டுவசதித் துறையில் ஜி ஸ்கொயர் தனியார் நிறுவனத்திற்கு எந்த ஒரு அனுமதியும் தரப்படவில்லை. சிஎம்டிஏ, டிடிசிபி-யிலும் அனுமதி தரப்படவில்லை. சட்டப்படி அனுமதி கேட்டால், கண்டிப்பாக தந்தே ஆக வேண்டும். ஆனால், இதுவரை எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை.
துறையில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டினால், அதை திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் தவறே நடைபெறவில்லை என்பதே உண்மை. ஜி ஸ்கொயர் முத்துசாமி என்று அண்ணாமலை பெயர் வைத்துள்ளார், அரசியலுக்காக அவதூறு பரப்புகிறார் அண்ணாமலை" என அமைச்சர் முத்துச்சாமி கூறினார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான தேவை இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்