சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி வளாகத்தில் 120 படுக்கைகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 31) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "தமிழ்நாட்டில் 11 இடங்களில் யோகா மற்றும் இயற்கை கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டுவருகிறது. கடந்த மூன்று வார காலத்தில் 50 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையம் 62ஆவது மையமாக திறக்கப்பட்டுள்ளது. சித்தா, இயற்கை மருத்துவ வழியில் கரோனா சிகிச்சைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
'இனி பரிசோதனை முடிவுகள் விரைவில் வரும்'
தமிழ்நாடு விரைவில் கரோனா தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும். தமிழ்நாட்டில் 269 இடங்களில் கரோனா பரிசோதனை மையம் உள்ளது. தொடக்கக் காலத்தில் பணிச்சுமை காரணமாக பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதமானது. கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதற்கு பின், தற்போது பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளிவருகிறது. எங்கேனும் பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கும்பட்சத்தில் அது சரி செய்யப்படும்.
அரசின் செயல்பாட்டை பாராட்டிய பிரதமர்
முன்கள பணியாளர்களை பாராட்டும் வகையில் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கோயம்புத்தூரில் நேற்று (மே 30) முதலமைச்சர் பிபிஇ கிட் அணிந்து கரோனா சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் ஆயிரத்து 300 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அழைத்து வருவதற்காக சென்னையில் 250 கார் ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டில் உள்ளன.
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களிலும் முதலமைச்சர் நேற்று கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். எனவே, போதுமான ஆம்பூலன்ஸ்கள் உள்ளன. சென்னை மாநகராட்சியின் கார் ஆம்பூலன்ஸ் திட்டத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: கருப்பு பூஞ்சை: புதுச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!