சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் 5000 மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டு, 6000க்கும் மேற்பட்ட முகாம்கள் இன்று நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 750 இடங்களில் திட்டமிடப்பட்டு 1000-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களுக்கு கரோனா சிகிச்சையும், கூடவே தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. நோரோ வைரஸ் கேரளாவில் வந்திருப்பதாக கிடைத்த தவலை அடுத்து தமிழ்நாடு- கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் விலங்குகளில் இருந்து பரவுகிறது, அதற்கான மருந்துகள் தமிழ்நாட்டில் தயாராகவுள்ளன.
மேலும், மருத்துவ கலந்தாய்வில் வன்னியர் உள்ஒதுக்கீடு கடைபிடிப்பது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி