சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”நேற்றிரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்துவருகிறது.
நேற்றிலிருந்து பெய்த மழையின் காரணமாக சென்னையில் 220 இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. இதுவரை இதில் 34 இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
மேலும் 127 பம்பு செட்டுகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. 46 பொக்லைன் மூலம் மண் எடுக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. நேற்று பெய்த மழையில் ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை பெய்துஇருக்கிறது. எனவே தேசிய பேரிடர் மீட்புத் துறை செங்கல்பட்டில் இரண்டு குழுக்கள், காஞ்சிபுரத்தில் இரண்டு குழுக்களும் உள்ளன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 124 முகாம்களில் 11 ஆயிரத்து 329 நபர்களை தங்கவைத்து அவர்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
தற்போது பெய்த மழையினால் பயிர் சேதங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதால் பயிர் சேதங்களை மீண்டும் கணக்கு எடுக்கச் சொல்லி இருப்பதாகத் தெரிவித்தார். நேற்றைய தினம் மட்டும் மழையினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை தமிழ்நாட்டில் 344 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 2205 குடிசைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதேபோன்று 273 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Chennai Rain - பாத் டப்பை படகாக மாற்றிய மன்சூர் அலிகான்