உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஜனவரி 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றார். அங்கிருந்து சென்னை வந்த அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் ஜனவரி 19ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வென்டிலேட்டருடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவரின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டதற்கு, அவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது இருந்ததைவிட உடல்நிலை நன்றாக இருக்கிறது.
அவரின் உடல் நிலை குறித்து தினமும் அரசுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை அவருக்கு எக்மோ சிகிச்சை தேவைப்பட்டால் அளிப்பதற்காகவே இந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரின் உடல்நிலை குறித்து அரசிடம் தெரிவித்து விட்டு மருத்துவமனை சார்பில் அறிக்கை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அமைச்சர் காமராஜை காண்பதற்கு அவர் மாவட்டத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்தில் வந்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:அமைச்சர் காமராஜ் பூரண நலம்பெற பொதுமக்கள் சிறப்பு வழிபாடு!