சென்னை: மறைமலை அடிகளாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்த சாவடி தெருவில் அப்பகுதி கலைமையத்திலுள்ள அவருடைய இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையினை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், “தமிழ் மொழிக்காக தமிழ்நாடு அரசு வேறு எந்த மொழிக்காகவும் வழங்கப்படாத விருதுகள், பரிசுகளை வழங்கிவருகிறது, தமிழ் பண்பாட்டு மையங்கள், தமிழ் வளர் மையங்கள் சற்று தடை பெற்றிருந்தன. அவை மீண்டும் செய்லபடும். அமைச்சர் நிதிநிலை அறிக்கைகள் கொடுக்கபட்டுள்ள 49 அறிவிப்புகளும் செயல்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அகழ்வாய்வுப் பணிகள் ஏழு இடங்களில் தொடர்ந்து நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. குறிப்பாக, கிழடியில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள ஏழு இடங்களில் அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஒவ்வொரு நாளும் முக்கியமான கண்டுபிடிப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
அதேபோல உலக தமிழ்ச் சங்கத்தில் ’சங்கங்களின் சங்கமம்’ என்ற தலைப்பில் டிஜிட்டல் முறையில் நிகழ்ச்சி நடப்பதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகளாரின் இல்லம் உள்ள தெருவிற்கும், பாலத்திற்கும் அவரின் பெயர் வைக்க வேண்டும் என்று அவருடைய குடும்ப உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்” என்றார்.