தீபாவளியை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு குறித்து கேட்டதற்கு, கண்டிப்பாக அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றும், சட்டத்திற்கு கட்டுப்படுவதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்றும் கூறினார். இது பாஜகவிற்கானது மட்டுமல்ல என்ற ஜெயக்குமார், அனைத்து கட்சியினருக்கும் இதே நடைமுறைதான் என்றும் தெரிவித்தார்.
மேலும், கரோனா தொற்று அதிகரித்துவிடக்கூடாது என்பதால், இந்த நேரத்தில் வேல் யாத்திரை வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதனை கை விடுவதுதான் அவர்களது கட்சிக்கும் நல்லது என்றார். மீறி யாத்திரை நடத்தினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கவனத்தில் கொண்டு ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் எனக் கூறினார். மேலும், ஆன்லைன் விளையாட்டு தடை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இதையும் படிங்க: ’தடையை மீறி வேல் யாத்திரை நடந்தால் எதிர்ப்போம்’