சென்னை பூவிருந்தவல்லியில் தனியார் பள்ளியின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டார்.
அப்பொழுது நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர், "தமிழ்நாட்டில்தான் ஒட்டுமொத்த பட்ஜெட்டின் ஐந்தில் ஒரு பங்கு கல்வித் துறைக்கென்று ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. குறிப்பாக பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரிப் படிப்புக்கு செல்லும் உயர் கல்வி மாணவர்களின் எண்ணிக்கை 49.3 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. இந்திய அளவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம் சிறந்து விளங்குகிறது. இதனால்தான் வெளிநாட்டினர் இங்கு வந்து மருத்துவம் பார்த்து முற்றிலும் குணமடைந்து செல்கின்றனர்" என்றார்.
இதனைத் தொடர்ந்து சிறந்த மாணவருக்கான விருது, சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கி கௌரவித்தார்.