சென்னையில் புதிதாகக் கட்டப்படவுள்ள, கட்டப்பட்டுவரும் எட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று பார்வையிட்டார். அவருடன் குடிசை மாற்று வாரியத்தின் செயலர் கோவிந்த ராவ், சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன், உள்ளிட்டோர் சென்றனர். நுங்கம்பாக்கம் சுதந்திர நகர், தி.நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுசெய்தனர்.
அங்குள்ள சாலைகளை உடனடியாகச் சீரமைத்து, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோல மோட்டர் மூலம் மாடிகளுக்கு தண்ணீர் ஏற்றும் நடவடிக்கையை மாற்றி, வீடுகளுக்கே நேரடியாகத் தண்ணீர் கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அலுவலர்களிடம் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆய்வுசெய்தேன். 1970ஆம் ஆண்டு சென்னையில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி வீடுகள் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டது. சிதிலமடைந்த வீடுகளைப் புனரமைக்க வேண்டும், சென்னையில் சிதிலமடைந்த வீடுகளை இடித்து அதே இடத்தில் அவர்களுக்கே கட்டுத்தர முதலமைச்சரிடம் பரிந்துரைக்க உள்ளேன்.
பட்டினம்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அங்குள்ள மக்களுக்கே வழங்குகிறோம். பூர்வ குடிகளை அகற்றவில்லை, அவர்களுக்கு அருகிலேயே வீடுகள் வழங்கியுள்ளோம். கழிவுநீர் கால்வாய், குடிநீர், மின்சார வசதிகளை தடையின்றி குடிசை மாற்று வாரிய பகுதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உதவித்தொகை அதிகப்படுத்தி தரப்படும்
தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளைப் போல தரமான கட்டடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றன. புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அடுக்கு மாடிகளை அதிகரித்து ஆக்கிரமிப்பில் இருப்பவர்களுக்கும் வீடு வழங்கப்படும்.
இதுவரை 22 ஆயிரம் குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்களுக்கான வீடுகள் கட்டித்தரப்படும். குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருப்பவர்கள் வீடுகளுக்கே தண்ணீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிசை மாற்று வாரிய மாற்று வீடுகள் கட்டித்தரும் வரை, மக்களுக்கு கொடுக்கப்படும் எட்டாயிரம் ரூபாய் உதவித் தொகையானது உயர்த்தித் தரப்படும். இந்த விஷயத்தை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். வரும் பட்ஜெட்டில், மாற்று வீடுகள் வழங்கும்வரை கொடுக்கப்படும் உதவித்தொகையை அதிகப்படுத்தி தரும் அறிவிப்பு வெளியாகவுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடிசை இடிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் புகார்