சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி சந்தித்து, ஆவின் நிறுவனத்தில் நடக்கும் ஊழல்களைப் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகத் தமிழ்நாடு முதலமைச்சரும், லாபத்தில் இயங்குவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலஜியும் முரணாகக் கருத்துகளை கூறிவருகின்றனர். இந்நிலையில், உண்மை ஆவின் நிலவரம் பற்றி அறிய அதன் இணையதளத்தை ஆராய்ந்தால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 300 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமடைந்துள்ளது தெரியவந்துள்ளது " என்றார்.
மேலும், " 2016 - 17ஆம் ஆண்டு சுனில் பாலிவால் ஆவின் இயக்குநராக இருந்தபோது 139.34 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கிய ஆவின் நிறுவனம், 2017-18 ஆம் ஆண்டுக்குள் காமராஜர் ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்தபோது நஷ்டத்தில் இயங்க தொடங்கியது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆவின் நிறுவனம் ஒட்டு மொத்தமாக நஷ்டத்தில் சென்றால் அதனை மூடிவிட்டு தனியாருக்குத் தாரை வார்த்து விடலாம் என எண்ணுகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிர்வாக இயக்குநர் காமராஜர் உள்ளிட்ட ஆவின் முக்கிய நிர்வாகிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.