சென்னை: சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த காஞ்சனா என்பவர், அனுமதியின்றி கட்டடம் கட்டியுள்ளதாகக் கூறி அவருக்கு சொந்தமான வீட்டுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து காஞ்சனா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரருக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் அந்த உத்தரவில், ஆக்கிரமிப்புகளையும், விதிமீறல்களையும் கண்டறிய டிரோன் போன்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், சிறப்பு அதிரடிப் படை அமைக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விதிமீறல் கட்டடங்களுக்கு வர்த்தக கட்டடங்களுக்கான கட்டணத்தில் ஐந்து மடங்கு அதிகமாக மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை விதிக்கும்படி உத்தரவிட்டனர்.
அதேபோல, கட்டுமானங்கள் முடிந்த பின் கட்டடத்துக்கு ஒப்புதல் கோரிய விண்ணங்களை ஏற்கக் கூடாது என அறிவுறுத்தினர். கட்டட அனுமதிக்கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க அலுவலர்களுக்கு நியாயமான அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், உடனடியாக ஒப்புதல் வழங்க கோருவது என்பது லஞ்ச லாவண்யத்தையே ஊக்குவிக்கும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரப்புரை பட்டியல்!