சென்னை காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த கப்பலில் பொறியாளராக பணியாற்றிய இந்தோனேசியாவைச் சேர்ந்த முகமதுஸெனல் அரிஃபின் என்பவர், கப்பல் பணியாளரால் கடந்த 2021 செப்டம்பரில் தாக்கப்பட்டு, படுகாயமடைந்தார்.
இந்நிலையில் காமராஜர் துறைமுகம் அமைந்துள்ள எண்ணூரில் மருத்துவமனை வசதி இல்லாததால், முன் அனுமதியில்லாமல் வெளிநாட்டவர் சட்டத்துக்கு விரோதமாக, கப்பலை விட்டு வெளியேறி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் அரிஃபின்.
சிகிச்சைக்குப் பின் கப்பலுக்கு திரும்ப முயற்சித்த அவரை உள்ளூர் காவல்துறையினர் கைது செய்து, பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்கள் முகாமில் அடைத்தனர்.
முகாமில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அரிஃபின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாக்கப்பட்ட நிலையில் வாழ்வா? - சாவா? என்ற சூழலில், பின் விளைவுகளை அறியாமல், உயிரை காப்பாற்றுவதற்காக சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டுள்ளார் எனக் கூறி, அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், உடனடியாக அவரது பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைத்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜெய்ப்பூர் கிணற்றில் இருந்து மூன்று சகோதரிகள், 2 குழந்தைகளின் உடல்கள் மீட்பு