சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த 'கலைஞர் பாசறை' கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் புகார் அளித்தார்.
இதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மே மாதம் இந்த வழக்கில் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டார். பின்னர், பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டார். அதன்படி, இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில், காவல்துறையினரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல் ஆர்.எஸ். பாரதிக்கும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, தன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது, நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான அமர்வின் முன்பாக இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், “இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்ட வழக்கு, அவ்வாறு பேசியது அம்மக்களை புண்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவிப்பதாக மனுதாரர் கூறினார். இதை கருத்தில் கொள்ளாமல், சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வழக்கு முடியும்வரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு மனுதாரருக்கு விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் ” என்று வேண்டுகோள் விடுத்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான அரசின் மூத்த வழக்குரைஞர் ஏ. நடராஜன், “வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி, வழக்கில் எந்தவொரு உத்தரவு பிறப்பிக்கும் முன்னர், பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்க வேண்டும். அந்த வகையில், இந்த வழக்கில் புகார்தாரரை சேர்த்து விசாரிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி, “சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவது தொடர்பாக, விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபரை (புகார்தாரர்) சேர்க்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு!