மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசு அறிவிப்பை எதிர்த்து புதுச்சேரி மாநில மின் துறை ஊழியர்கள், கடந்த 4ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரியும், போராட்டத்தை கைவிடாவிட்டால் ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மனுதாரர் மனுவில் குறிப்பிட்டது என்ன?
அதில், நிவர் புயலால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் மின் கம்பங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்தும் விழுந்துள்ளன. மின் துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக, இவை சரி செய்யப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மத்திய அரசு சார்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
இதையடுத்து, டிசம்பர் 4ஆம் தேதிமுதல் திடீரென வேலைநிறுத்தத்தில் சட்டவிரோதமான ஈடுபட்டவர்கள் மீது துறைரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைநிலை ஆளுநர், புதுச்சேரி தலைமைச் செயலாளர், புதுச்சேரி மின் துறை செயலாளர், மின் துறை தனியார்மயமாக்கல் எதிர்ப்புக் குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க...அசோசம் அறக்கட்டளை வாரம்: பிரதமர் மோடி சிறப்புரை!