சென்னை: நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாஸுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், சமூக வலைதளங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை மாரிதாஸ் நீக்க வேண்டும் என்றும் தனி நபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
மேலும், நீதிமன்றத்தின் மறுஉத்தரவு வரும் வரை ஆதாரமற்ற அவதூறு பரப்பும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் மாரிதாஸ் வெளியிட இடைக்கால தடையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக மாரிதாஸ் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் விரிவான பதில் மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
மாரிதாஸ் மீது மோசடி வழக்குப்பதிவு!
முன்னதாக, நியூஸ் 18 தொலைக்காட்சியின் பின்புலம் குறித்தும், அதன் ஊழியர்கள் குறித்தும் அவதூறான செய்திகள் வெளியிட்ட மாரிதாஸிடம் ரூ. 1.5 கோடி இழப்பீடு கேட்டு செய்தி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், மக்களிடையே மத ரீதியான பிளவு ஏற்படுத்தும் வகையிலும், செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் காணொலிகளை வெளியிட்டு வருகிறார். எனவே, இதுவரை வெளியிட்ட காணொலிகளை நீக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.