சென்னை: திமுக மூத்த நிர்வாகியும், தமிழ்நாடு அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 மார்ச் 29இல் திருச்சியில் நடைபயிற்சி சென்றபோது கொலைசெய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்தார்.
சகோதரரின் மனு
கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கையை மூன்று மாதத்தில் தாக்கல்செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல் துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல்செய்திருந்தார். இது சம்பந்தமாக காவல் துறைத் தலைவருக்கு (DGP) அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அரசு ஒத்துழைப்பு
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி வி. பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட உறையில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. அப்போது, சிபிஐ விசாரணை அலுவலரோடு சேர்த்து சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, சிபிஐக்கு உதவ தமிழ்நாடு காவல் துறை அலுவலர்களின் பட்டியலை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாடு காவல் துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "கடந்த 10 ஆண்டுகளாக சிபிசிஐடி, சிபிஐ காவல் துறைகள் விசாரணை நடத்தியும், கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை என்பதால், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்டும்.
வாரம் ஒருமுறை அறிக்கை
தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதன், சென்னை சிபிஐ அலுவலரான ரவி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும். அடுத்தகட்ட விசாரணையைச் சிறப்புக் குழு புலனாய்வு தொடர வேண்டும்.
சிபிசிஐடி உயர் அலுவலர் சகீல் அக்தர் விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். அதை, உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். மேலும், 15 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும்.
இந்தக் கொலை வழக்கின் விசாரணை முடியும்வரை சிபிஐ அலுவலர் ரவிக்கு, சிபிஐ வேறு பணிகளை ஒதுக்கக் கூடாது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்குத் தேவையானவற்றை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும். சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைக் கூடிய விரைவில் தொடங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
வரும் பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் தொடங்கினால் நல்லது எனக் கூறிய நீதிபதி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முதல்கட்ட அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும் எனவும் வழக்கு விசாரணையை மார்ச் 7ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சர்வதேச அளவில் ஹிஜாப்...! - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா அதிர்ச்சி