சென்னை: சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாக கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர், கடந்த அக்டோபரில் அவரை கைது செய்தனர்.
குண்டாஸில் சிறை
பின்னர், குண்டர் சட்டத்தின்கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு, மார்ச் 9ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நீதிமன்றத்தை மதிக்க மாட்டார்? காவல் துறையை மதிக்க மாட்டார்? சட்டத்தை மதிக்கமாட்டார்? அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என கண்டனம் தெரிவித்த நீதிபதி குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றம் கேள்வி
இதற்கிடையே மனுதாரர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் 'வெறுப்புணர்வோடு பேசமாட்டேன்' என்று மனு தாக்கல் செய்துவிட்டு மீண்டும் பேசுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அவர் மதிப்பதில்லை என்றும்; இவரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மதமோதலை உருவாக்கும்விதமாக பேசுவதால், அவர் மீது காவல்துறை வழக்குத் தொடர்ந்தது சரிதான் என்றும்; எனவே அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அச்சத்தில் ஆசிரியர்கள்... தேசிய வரைவு உயர்கல்வித்தகுதிகள் திட்டத்தை திரும்பப்பெற கோரிக்கை