சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக ஜனவரி 4ஆம் தேதி நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 11 மாதங்களில் பல்வேறு தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீர்நிலைகள் பாதுகாப்பதிலும், திருநங்கைகள் உரிமைகள், விலங்குகளின் நலன் மற்றும் பொது நல வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கினார்.
இந்நிலையில், செப்டம்பர் 16ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றக் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்ஜிப் பானர்ஜி, தனது வரவேற்புரையில், திருவள்ளுவர் பிறந்த மண்ணுக்கு வந்துள்ளது பெருமை அளிப்பதாகவும், நாட்டிலேயே ஒரு மொழியின் பெயரைக் கொண்டுள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடு என்றும், தொன்மையான மொழியாம் தமிழை இன்னும் கோடிக்கணக்கான பேர் செருக்கோடும், பெருமையோடும் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாரம்பரியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலிருந்து இன்னொரு பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது தனக்குப் பெருமை அளிப்பதாகவும், வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்றி நீதி பரிபாலனம் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.
இசை, பாரம்பரியம், நடனம், இலக்கியம், கலாச்சாரம் என அனைத்திலும் தனித் தன்மையோடு சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்னுடைய மாநிலம் எனவும், இந்த மாநிலத்தில் நான் ஒரு சேவகனாக பணியாற்ற வந்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, ஒரு வருட காலத்திற்குள் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது வேதனையளிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு வாளியுடன் சென்று நீதிமன்றத்தை தூய்மைப்படுத்த உள்ளேன் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அதிரடி