சென்னை: கடந்த சில நாள்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஜூலை 11ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால், ஓபிஎஸ் தரப்பினர் செய்த அனைத்து முயற்சிகளும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஈபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவை நடத்தி இடைக்கால பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்துவிட வேண்டும் என முயற்சிகளில் ஈடுபட்டனர். இறுதியில் பொதுக்குழு நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 11ஆம் தேதி, காலை 9 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு ஈபிஎஸ் வருகை தந்தார். அதே நேரத்தில், ஓபிஎஸ் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். ராயப்பேட்டையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் இருதரப்பை சேர்ந்த பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் வகையிலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கக்கூடிய பிரச்சனை அமைந்திருப்பதாக காணொலி, புகைப்படம் ஆதாரங்களுடன் ராயப்பேட்டை போலீசார் மயிலாப்பூர் வட்டாட்சியரிடம் தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தை "வில்லங்க சொத்தாக" அறிவித்து அதற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
அதிமுகவில் ஏதாவது ஒரு நிகழ்வு என்றால் முதலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அதன் அடிப்படையில், கட்சியின் தலைமை நிர்வாகிகள் சார்பாக நேற்று முன்தினம் (ஜூலை 11) காலை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தில் இரண்டு சிலைகளில் உள்ள ரோஜா மாலைகளும் வாடிய நிலையில் காட்சியளிக்கின்றன. இந்த காட்சியை பார்த்த அதிமுக தொண்டர்கள் தமது தலைவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா என வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாநகராட்சியின் 108 பள்ளிகளுக்கு புதியதாக 10,279 மேசைகளை கொள்முதல்