சென்னை: நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில் அவர், "தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்குத் திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை வட தமிழ்நாடு கரையை நெருங்கக்கூடும்.
இதனால் வடகிழக்குப் பருவ மழை வலுவாகத் தொடர உள்ளது. அடுத்த 3 தினம் பெரும்பாலான இடங்களில் மழை நீடிக்கும். 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும்.
மேலும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளைய வானிலை
நாளை (10.11.2021) டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் , புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாகப் பதிவான மழையின் அளவைப் பொறுத்தவரை மகாபலிபுரம் (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 12, சித்தார் (கன்னியாகுமரி), மரக்காணம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 9 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
09-11-2021 முதல் 10-11-2021 வரை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பகுதிகள்
10-11-2021 முதல் 11-11-2021 வரை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பகுதிகள்
11-11-2021 முதல் 12-11-2021 வரை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பகுதிகள்
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 11ஆம் தேதி வரை தெற்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரைப் பகுதிகள், குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழ்நாட்டில் 36 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 25 செ.மீ., ஆகும். இது 46% அதிகமாகப் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 59 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 40 செ.மீ, ஆனால், தற்போது 48% அதிகமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 ரேடார்கள் உள்ளன; அனைத்தும் சரியாகச் செயல்படுகின்றது. சென்னையில் 2, ஸ்ரீஹரி கோட்டாவில் 1 காரைக்காலில் 1 உள்ளது.
இதில் சென்னையில் 1 ரேடார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அதனால் சில பாகங்களில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேரம் அதனால் செயல்பட முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? - நீதிபதிகள் காட்டம்