சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் இயங்கிவரும் வணிக வளாகங்கள், அங்காடிகள் ஆகியவை இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணிவரை செயல்பட அனுமதியில்லை எனவும் கொத்தவால் சாவடி மார்க்கெட் நாளை (ஆகஸ்ட் 01) முதல் ஆகஸ்ட் 09ஆம் தேதி காலை 6 மணிவரை செயல்பட அனுமதியில்லை எனவும் மாநகராட்சி நிர்வாகம் நேற்று (ஜூலை 30) தெரிவித்தது.
அமலுக்கு வந்த விதிமுறைகள்
இந்த விதிமுறைகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. ரங்கநாதன் தெருவிலுள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த தகவல் தெரியாமல் காலை வழக்கம்போல் வந்தனர். பின்னர், கடை திறக்க அனுமதியில்லை என்பதை அறிந்தவுடன் அவர்கள் மீண்டும் திரும்பிச் சென்றனர்.
மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக தி-நகரை சுற்றி கிட்டத்தட்ட 10 இடங்களில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மாநகராட்சி சார்பில் ஊரடங்கு மண்டல அமலாக்க குழு தொடர்ந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
தற்போதுதான் வியாபாரம் தொடங்கியது, அதற்குள் முன் அறிவிப்பின்றி கடைகளை மூட சொல்வதால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என தி.நகர் வணிக அங்காடிகள் சங்க துணை செயலாளர் சர்புதின் தெரிவித்தார்.
பாதிக்கப்படும் வாழ்வாதாரம்
இது குறித்து அவர் கூறுகையில், "மாநகராட்சி நிர்வாகம், மக்களின் நலனுக்காக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இருப்பினும் கடைகளை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. ஏற்கனவே 50 நாள்களுக்கும் மேலாக கடைகள் மூடி இருந்தன. இந்நிலையில் முன் அறிவிப்பின்றி இந்த தகவல் வந்துள்ளது. முன்னதாக அறிவித்து, இரண்டு நாள்கள் அவகாசம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பொதுவாக 5ஆம் தேதி காலகட்டத்தில்தான் கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். தற்போது 30ஆம் தேதியே கடை அடைக்கப்பட்டதால் எப்படி அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். அதுமட்டுமின்றி சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டுமே அதிகளவில் மக்கள் கூட்டம் வரும், மற்ற தினங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் மக்களை விட 20 விழுக்காடு மக்கள் மட்டுமே இங்கே வருவார்கள்.
அரசுக்கு கோரிக்கை
ஆடி மாதம் என்பதால் தற்போதுதான் மக்கள் சற்று பொருள்களை வாங்குவதற்கு வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்று முன்னறிவிப்பின்றி எடுக்கப்படும் நடவடிக்கையால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து கடைகளை திறக்க அனுமதியில்லை என அறிவித்தால் நாங்கள் பெரும் பாதிக்கப்படுவோம்.
இதனால், மாநகராட்சிக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை மூடிக்கொள்கிறோம். திங்கள் முதல் வெள்ளிவரை நேரத்தை குறைத்து கடைகளை திறந்துகொள்கிறோம். இதனால், எங்களது வாழ்வாதாரமும் பாதிக்காது. இதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அரசு வருவாய்க்கு மதுபானக் கடைகள் மட்டுமே வழியா? வலுக்கும் டாஸ்மாக் எதிர்ப்பு