இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நீட் நுழைவுத் தேர்வால், அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் இரண்டு முதல் 6 மாணவர்கள் வரை மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கிட, நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அரசு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்தக் குழு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 15 விழுக்காடு வரை இட ஒதுக்கீட்டை வழங்கிட பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இப்பரிந்துரையை, வரும் கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்பட்டால், 900 இடங்கள் வரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். இந்த இட ஒதுக்கீட்டை 25 விழுக்காடாக உயர்த்துவது தொடர்பாகவும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட, எந்த வித சட்ட சிக்கல்களும், தடங்கல்களும் ஏற்பட்டு விடாமல், எச்சரிக்கை உணர்வுடன் அரசு செயல்பட வேண்டும். அதேபோல், நீட் தேர்விலிருந்து, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விலக்களிக்க வேண்டும் எனக் கோரும் மாநிலங்களுக்கு, நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில், தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உடனடியாக திருத்தம் கொண்டுவர வேண்டும் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி பணியிடங்களின் எண்ணிக்கை குறைகிறதா?