ஆவடியில் மதிமுக பிரமுகர் வழக்கறிஞர் அந்திரிதாஸ் இல்லத் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார் .
ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் மணமக்களுக்கு மாலை மாற்றிவைத்து வாழ்த்து தெரிவித்து திருக்குறள் புத்தகத்தையும் அன்பளிப்பாக வழங்கினார், வைகோ.
பின்னர் விழா மேடையில் பேசிய வைகோ, 'இந்தியாவினுடைய எதிர்காலத்திற்கு ஒவ்வொரு ஆபத்தாக வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், எந்தத் தொலைக்காட்சியை எடுத்தாலும் சரி, குடியரசு தினவிழா ஊர்வலமாக இருந்தாலும் சரி, அவர்கள் வெளியிடுகிற அஞ்சல் தலையாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கையை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவது என்ற ஒரு முடிவோடு இருக்கிறார்கள். அதை எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது’ என்றார்.
தன்னோடு இருந்தால் எம்.எல்.சி. ஆகலாம், எம்.பி. ஆகலாம், அமைச்சர் ஆகலாம் என்று தான் யாருக்கும் சொல்லவில்லை என்று கட்சியினரிடத்தில் எடுத்துரைத்த அவர், தன்னுடன் வந்தால் எதுவுமே கிடைக்காது, சிறைக்குப் போகலாம், துன்பப்படலாம், ஏனெனில் தமிழ்நாட்டைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று வைகோ ஆதங்கத்துடன் பேசினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ள கையெழுத்து இயக்கத்தை நாம் வெற்றிபெற வைக்கவேண்டுமெனவும் வைகோ மதிமுக தொண்டர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.
'வாழ்கிற காலத்தில் நாட்டுக்காக, பிறந்த மண்ணுக்காக, பேசும் மொழிக்காக, திராவிட இயக்கத்திற்காக, அண்ணா, பெரியார் கொள்கைகளைப் பாதுகாக்க, தமிழ்நாட்டினுடைய சிறப்புகளை நிலைநாட்டுவதற்காக, வாழ வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டிருப்பவர்கள்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள்' என்றும் வைகோ உணர்ச்சிப்பொங்க பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, 'மக்கள் தொகைப் பதிவேடு பதிவு செய்யப்பட திட்டமிட்டிருப்பதை எதிர்த்து வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதிவரை நடக்கவுள்ள மாபெரும் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடமையாற்ற இருக்கின்றன' என்றார்.
'மத்திய அரசு திராவிட இயக்கத்தினுடைய அடிநாதமான கொள்கைகளை நசுக்குவதற்கும், தமிழ்நாட்டின் உயிர் ஆதாரங்களை அழிப்பதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறது. ஆனால் அவற்றை எதிர்த்து முறியடிப்போம்' என்றும் வைகோ அறைகூவல் விடுத்தார்.
இதையும் படிங்க: 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆயத்த பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை