இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒரு இடம் கூட ஒதுக்காமல், கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு திட்டமிட்டே வஞ்சித்து வருகிறது. மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும், அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்த இடங்களை நிரப்பும்போது பிற்படுத்தப்பட்டோரின் அகில இந்திய ஒதுக்கீடான 27 விழுக்காட்டை ஒதுக்காமல், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பாஜக அரசு தட்டிப் பறித்து வருகிறது.
அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட முதுநிலை மருத்துவ இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 2017 இல் 3101 இடங்களும், 2018 இல் 2429 இடங்களும், 2019 இல் 2207 இடங்களும், 2020 இல் 2155 இடங்களுமாக, நான்கு ஆண்டுகளில் மொத்தம் 9892 இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர்.
ஆக மொத்தம் கடந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளுக்காக மாநிலங்கள் வழங்கிய மொத்த இடங்கள் 42,842 இல் ஒரு இடம் கூட, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மட்டும் 10 விழுக்காடு இடங்களை வாரி வழங்குவதில் தாராளமான மனப்பான்மையுடன் பாஜக அரசு நடந்து கொள்கிறது.
ஆகவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியா முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கிடைக்க வேண்டிய 9892 இடங்களையும், அதேபோன்று இளநிலை மருத்துவப் படிப்புகள், இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு சட்டப்பூர்வ இடஒதுக்கீட்டுக்கான 1135 இடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 11,027 இடங்களை சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முகக்கவசங்கள் தயாரிப்பு... தமிழ்நாடு இரண்டாவது இடம்: அமைச்சர் வேலுமணி