சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜன.27) தொடங்கி நடைபெற்றது.
முதல் நாளான இன்று சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்றது.
நாளை (ஜன.28), நாளை மறுநாள் (ஜன.29) அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறும். கரோனா பரவல் காரணமாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4 ஆயிரத்து 319 இடங்களுக்கும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1,503 இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வின் போது மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் வசந்தாமணி ஆகியோர் கலந்தாய்வு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வு குழு செயலர் வசந்தாமணி, ”சிறப்பு பிரிவு கலந்தாய்வில் இன்று மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு மொத்தமுள்ள 222 இடங்களுக்கு 76 பேர் விண்ணப்பித்தில் 52 பேரை அழைத்துள்ளோம். விளையாட்டு வீரர்கள் பிரிவில் 152 பேர் விண்ணப்பித்ததில் 18 பேரை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 7 எம்பிபிஎஸ் இடங்கள் 1 பிடிஎஸ் இடங்களுக்கும் உள்ளது. ராணுவ வீரர்கள் வாரிசுகள் பிரிவில் மொத்தம் 360 பேர் விண்ணப்பித்ததில் 19 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவில் எம்பிபிஎஸ் 10 இடங்களும், பிடிஎஸ் 1 இடங்களும் உள்ளன.
மொத்தம் 92 பேர் இன்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 உள்ஒதுக்கீட்டுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதற்காக நாளை 650 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜன.30ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.
மருத்துவக்கல்லூரிகளில் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்
அரசுப்பள்ளி மாணவர்கள் தவறுதலாக பொது பிரிவில் விண்ணப்பித்ததை மாற்றம் செய்வதற்கு நாளை காலை 8 மணி வரை அவகாசம் உள்ளது என்றும் இதுவரை 15 மாணவர்களின் விண்ணப்பங்கள் சரி செய்வதற்காக வந்துள்ளது.
மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறும்போது, அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர உள்ள மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்விற்கு பதிவு செய்தப்பின்னர் அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹெல்மெட், முகக்கவசம் இன்றி பைக் ரைடு; சர்ச்சையில் சிக்கிய சு.வெங்கடேசன்!