சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (44). இவர் கிண்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 27) பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும் வழியில் பல்லாவரம் பாரதிநகர் அருகே சென்றபோது, அவரை வாகனத்தை மதுபோதையில் இருந்த ஒருவர் எட்டி உதைத்துள்ளார். அதில் நிலைதடுமாறிய பெண் காவலர் கீழே விழுந்தார். அதன் பிறகு பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அந்த பெண் காவலர் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த ரக்பி (19) என்பது தெரியவந்தது. அவர் தினம்தோறும் அந்தப் பகுதியில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமைக் காவலரை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.