சென்னை: நாட்டில் 73ஆவது குடியரசுத் தினவிழா நேற்று(ஜன.26) கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் குடியரசுத்தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்த் தாய் வாழ்த்தின் போது, வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்கவில்லை என்றும், காரணம் கேட்டதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதனிடையே மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த ட்வீட்டில் "தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல, மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பதும் ஆகும். இது கடும் கண்டனத்துக்குரியது. நிகழ்ந்த சம்பவத்திற்கும், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மாநிலப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும்போது எழுந்து நிற்பது கட்டாயம் - அரசாணை