சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியான வியாசர்பாடியில் இருக்கும் அம்பேத்கர் கல்லூரியிலுள்ள சித்த மருத்துவ முகாமை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். முன்னதாக, அங்கிருந்த களப்பணியாளர்களுக்குக் கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக ஐந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வியாசர்பாடியிலுள்ள அம்பேத்கர் கல்லூரியில் அமைக்கப்பட்ட முகாமில் முற்றிலும் தமிழ் முறையான சித்தா மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க இங்கு 224 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு நோயாளிகளுக்கு முற்றிலும் சித்தா மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் சித்த மருத்துவம் ஒரு பெரும் பங்காக இருக்கும். உலகத்திற்கே சித்த மருத்துவத்தின் மூலம் தேவையான தடுப்பு மருந்தை தமிழ்நாடு அளிக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு?