மதுரை: அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் நாள் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் உலக நாடுகளிலிருந்து பல்வேறு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகிறார்கள்.
இந்தியாவின் சார்பாக மதுரையைச் சேர்ந்த இளைஞர் செல்வபிரபு திருமாறன் பங்கேற்றார். 6-ஆம் நாளான நேற்று (ஆக. 6) நடைபெற்ற ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் (Triple Jump) போட்டியில் பங்கேற்ற செல்வ பிரபு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். மும்முறை தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் செல்வ பிரபு பெற்றுள்ளார்.
இவர் மதுரை மாவட்டம் ஊர்மெச்சிகுளம் அருகே உள்ள கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் 2ஆம் ஆண்டு பயில்கிறார். மேலும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று சாதனையும் படைத்துள்ளார்.
செல்வபிரபுவின் தந்தை திருமாறன் தொலைபேசியில் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், "சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் நாங்கள். எனது மூத்த மகன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கிறார். அவர் கால்பந்து விளையாட்டு வீரராகத் திகழ்கிறார். 2ஆவது பையன் செல்வபிரபு. தற்போது தேசத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். மேலும், தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.