தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன. இ-மெயில் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மொபைல்-ஆப் மூலம் வீட்டில் இருந்தபடியே நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் தலைமை நீதிபதி நேரில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தற்போதுள்ள ஊரடங்கு நிலை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், அவசர மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை மட்டும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
தலைமை நீதிபதி, நிர்வாகக் குழு நீதிபதிகள் ஆகியோர் அடங்கிய குழு, மாவட்ட நீதிபதிகளுடன் காணொலி காட்சி மூலம் தொடர்ந்து நீதிமன்றத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து பேசினர். நாளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு தலைமை நீதிபதி, தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் செயல்படுவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'சுய தனிமைப்படுத்தல் சிறை வாசம் அல்ல'- தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி