கடந்த சில நாட்களுக்கு முன்பு பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கரணை மாநாகராட்சி வார்டு அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. அதனால் உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டு நீதிபதிகள் அமர்வில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை விசாரிக்க தனக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஏன் இந்த வழக்கில் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நாளை மறுநாள் தமிழ்நாடு அரசு இதற்குப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படியுங்க:
சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம்: முன்னாள் கவுன்சிலர் மீது 308 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!