சென்னை: மெரினா கடற்கரையில் லூப் சாலையோரம் மீன் வியாபாரம் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெறும் இடம். இங்கு மீனவர்கள் பிடித்த மீன்களை உடனடியாக விற்பனை செய்வர் என்பதால் மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்வர்.
லூப் சாலையோரத்தில் மீன் வியாபாரம் நடைபெறுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை ஒழுங்குப்படுத்துவதற்காக அப்பகுதி அருகே இரண்டு ஏக்கர் பரப்பளவில் 300 கடைகள், வாகன நிறுத்தும் இடவசதியுடன் மீன் விற்பனை அங்காடி அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
இந்தப் புதிய மீன் அங்காடி கட்டுமான பணிக்காக ஒன்பது கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட மதிப்பீட்டுக்குச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதில், கட்டுமான செலவுக்காக சுமார் எட்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலாண்மை, கட்டுமான தொழிலாளர்களுக்கான நலவாரிய நிதி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கி ஒன்பது கோடியே 97 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக விலை விவரப்பட்டியல் தயார் செய்யும் முதன்மைத் தலைமைப் பொறியாளர் பணி பதவி காலியாக இருந்ததால், அனைத்துக் கோப்புகளும் அந்தந்தத் துறை சார்ந்த தலைமைப் பொறியாளர்கள் வாயிலாகவும், துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள் வாயிலாகவும் சமர்ப்பிக்கப்பட்டன. அதனடிப்படையில் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக லூப் சாலையில் புதிய மீன் அங்காடியை, தற்போது விற்பனை செய்யும் பகுதியிலே கட்ட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கைவைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஞ்சலக படிவங்களில் மீண்டும் தமிழ் - அன்னைத் தமிழுக்கு கிடைத்த வெற்றி