சென்னையில் கல்லிரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஜஸ்பிர் சிங் என்பவருக்கு, அவரது உறவினர் நரேஷ்குமார் சாகர் தன் கல்லீரலை தானம் வழங்க முன் வந்தார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனை, அறுவை சிகிச்சை மேற்கொள்ள உரிய ஆவணங்களை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது.
அதை பரிசீலித்த குழு, கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், நரேஷ்குமார் கல்லீரல் தானம் வழங்குவது அவரது சகோதரருக்கு பிடிக்கவில்லை. இதனால், அவரது சகோதரர் மருத்துவமனைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கடிதத்தின் வாயிலாக அம்மருத்துவமனை நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, அறுவை சிகிச்சையை மருத்துவமனை நிர்வாகம் நிறுத்தி வைத்தது. அந்த புகாரை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கும் அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து, ஏற்கனவே குழு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி, உறுப்பு தானம் செய்யும் நரேஷ்குமார் சாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழு அளித்த ஒப்புதலை, மூன்றாம் நபர் அளித்த ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் ஒரு போதும் மறு ஆய்வு செய்யப்பட மாட்டாது. எனவே, மருத்துவமனை அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, தானம் அளிப்பவரின் சகோதரர் அளித்த புகார் தடையாகவில்லை எனக் கூறி, மருத்துவ தகுதி அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு