தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து ஆணை பிறப்பித்தார். ஆனால் இந்த உத்தரவை மீறி கூடுதலாக விற்பனை செய்த 10 சில்லறை விற்பனையாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் உத்தரவிட்டுள்ளார்.
ஆவின் நிர்வாகம் நடவடிக்கை
மேலும், ஆவின் மேலாண்மை இயக்குநர் அவர்களால் உடனடியாக சிறப்புக் குழுவை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் மே 21ஆம் தேதி, 10 சில்லறை விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. சிறப்புக் குழு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டபோது கீழ்கண்ட 10 சில்லறை விற்பனை கடைகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து 10 சில்லறை விற்பனை உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. இதுபோன்ற தவறுகளை சில்லறை விற்பனை உரிமையாளர்கள் செய்யும் பட்சத்தில் அவர்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.