சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜண்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (மே. 29) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை தமன்னா, பிரபு, பூஜா ஹெக்டே, விஜயகுமார், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தி லெஜண்ட் திரைப்படத்தின் இந்தி டிரெய்லரை நடிகர் நாசர் வெளியிட்டார். நடிகர் சுமன் கன்னட டிரெய்லரை வெளியிட்டார். மலையாள டிரெய்லர் நடிகை லதா வெளியிட்டார். நடிகர் விஜயகுமார் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்டார். தமிழ் டிரெய்லரை நடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அன்பு செழியன் வெளியிட்டனர்.
லதா மேடையில் பேசுகையில், "தொடர்ந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். தயாரிக்க வேண்டும். பலருக்கு சினிமாவில் வாய்ப்பு அளிக்க வேண்டும். நான் இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படம் சிறப்பாக வந்துள்ளது" என்றார்.
நடிகர் பிரபு மேடையில் பேசுகையில், "படம் வெற்றியடைய வாழ்த்துகள். ரொம்ப நல்ல மனசு உள்ளவர். நடிகர் விவேக் இன்று இங்கு இல்லை. அவருடன் ஒரு 4, 5 நாட்கள் தான் நடித்திருப்பார். விவேக்கின் இறுதி சடங்கு செய்தது எல்லாம் சரவணன் தான். கொஞ்ச நேரம் பழகிவிட்டால் கூட எல்லாத்தையும் செய்வார். இந்த படம் வெற்றியடைவது மக்கள் கையில் தான் உள்ளது. படம் வெற்றியடைய வாழ்த்துகள்" என்றார்.
நடிகர் நாசர் மேடையில் பேசுகையில், "ரொம்ப மகிழ்ச்சியான தருணம் குடும்ப விழா போல உள்ளது. இது மிகப்பெரிய பொருட் செலவில் உருவான படம். இது தன்னம்பிக்கையால் உருவான படம். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாடாக கலைஞர்ளுக்கு ஒரு கட்டடம் கட்ட திட்டம் போட்டோம். அதற்காக மலேசியாவில் ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டோம். ஆனால் அதற்கான பொருளாதாரம் இல்லை. சரவணன் தான் முதல் முதலாக 3 கோடி கொடுத்து கட்டடம் கட்ட உதவி செய்தார். இந்த 3 கோடி ஒரு ஆயிரம் குடும்பங்களுக்கு நிரந்தரமாக பசியை போக்கும் என்றார். ஒரு முறை ஒரு நிகழ்ச்சிக்காக ஹெலிகாப்டரில் ரஜினி, கமல், சரவணன் வருவதாக இருந்தது. ஆனால் சரவணன் அதை வேண்டாம் என மறுத்து விட்டார். அவர்கள் பெரிய நடிகர்கள் நான் சாதாரணமாக வருகிறேன் என்றார். ஒவ்வொரு முறையும் நடித்து முடித்த அனைவரிடமும் நான் எவ்வாறு நடித்திருக்கிறேன் சரியாக நடித்திருக்கிறேன் என்று ஆலோசனை கேட்பார். எப்படி நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டு அதன் படி அதை அப்படியே கேட்காமல் அவருக்கு என்று தனி பாணி வைத்துள்ளார். அப்படி சிறப்பாக நடித்தார். அந்த உழைப்பு தன்னம்பிக்கை மக்களிடத்தில் இந்த படத்தை கொண்டு சேர்க்கும். விவேக் நானும் இந்த படத்தில் தான் இறுதியாக நடித்தோம். ஆத்திகம் நாத்திகம் குறித்து பேசினார். ஆனால் அடுத்த வாரம் அவர் இல்லை. விவேக் நினைவாக இந்த படம் இருக்கும்" என்றார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மேடையில் பேசுகையில், "2019 இல் இந்த படத்தின் கதையை கேட்டு நான் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு 6 மாதங்கள் கழித்து இயக்குநர் வந்து கதையை சொன்னார்கள். சிறந்த திரைக்கதை. ஹாலிவுட் படத்தை போல திரைக்கதை இருந்தது. படம் மேல் சரவணனுக்கு அதிக ஈடுபாடு. பழைய பாடல் பற்றி எல்லாம் பேசுவார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் நடிக்கிறார் என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த கதை மிகப்பெரிய ஸ்டாரை கொடுக்க உள்ளது. அவர் அவரையே செதுக்கி உள்ளார். இவர் எப்படி நடிப்பார் இவர் நடித்தால் யார் பார்ப்பார்கள் என்று யோசித்து கொண்டு இருந்தேன். அதற்கான படம் தான் இது. சினிமாவில் உள்ள நாங்களே ஒரு கட்டத்தில் சோர்வாகி விடுவோம். ஆனால் அவர் அவருடைய வேலைகளை எல்லாம் பார்த்து விட்டு எங்களை சந்திப்பார். ஆச்சரியம் தான் இந்த படத்திற்கு வெற்றி ஒவ்வொரு 5 நிமிடமும் இந்த படத்தில் ஆச்சரியம் உள்ளது" என்றார்.
நடிகை தமன்னா மேடையில் பேசுகையில், "சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் பண்ணும் போது தான் எப்டி கேமிராவை எதிர் கொள்ள வேண்டும் என்று கற்று கொண்டேன். நான் ஒரு குடும்ப விழாவிற்கு வந்துள்ளேன். லெஜண்ட் சரவணன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இன்னும் நிறைய படம் பண்ண வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துகள்" என்றார்.
நடிகை ராய் லக்ஷ்மி மேடையில் பேசுகையில், "சரவணன் எது செய்தாலும் பிரமாண்டமாக தான் செய்வார். இந்த படமும் அப்டி தான் பிரமாண்டமான படம். படம் மிகப் பெரிய வெற்றி அடையும்" என்றார்.
லெஜண்ட் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனக்கு சிறுவயது முதல் சினிமாவில் நடிக்க ஆசை, எனது தொழில் அதற்கு இடம் கொடுக்கவில்லை. வெளியில் இருந்து பார்க்க சினிமா ஈசி மாறி தெரியும். ஆனால் அதில் வெற்றி அடைவது கடினம். எந்த பெரிய ஹீரோ உடன் சேர்ந்து நடிக்க ஆசை இல்லை. நான் சிங்கிள் ஆக தான் நடிப்பேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த். கடவுளா உழைப்பா என்ற கேள்விக்கு கடவுள் தான் முதல், அதன் பிறகு தான் உழைப்பு. முதல் நாள் நடிக்கும் போது கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் 5 படங்களும் வெற்றி சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்றால் அது லெஜண்ட் படத்தின் பாடல்கள் தான். 4 முறை பார்த்தால் தான் இந்த படம் முழு திருப்தி கிடைக்கும், அந்த அளவுக்கு இந்த படம் பிரமாண்டமாக சிறப்பாக உள்ளது. தமிழ் சினிமாவிற்கு முக்கிய மைல் கல்லாக இந்த படம் இருக்கும்" என்றார்.
லெஜண்ட் சரவணன் மேடையில் பேசுகையில், " விவேக் என்றும் என் நினைவில் இருப்பார். அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும் அவர் நம்மை விட்டு விலகியதை இன்றும் நம்ப முடியவில்லை. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரும்ப திரும்ப பார்க்க வைக்க கூடிய பிரமாண்டமான படம். இது ஒரு பான் இந்தியா படம். ஒரே நேரத்தில் 5 மொழியில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது" என்றார்.
இதையும் படிங்க: 'Dangerous Scientist' அவதாரம் எடுத்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி: வெளியானது ’தி லெஜெண்ட்’ டிரைலர்