சென்னை: சென்னை சத்தியவாணி முத்துநகரில் உள்ள 178 குடும்பங்களை புளியந்தோப்பு கேபி பூங்கா குடியிருப்புக்கு மறு குடியமர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், துணை ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "பக்தர்கள், அர்ச்சகர்கள், பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் என அனைவரும் சட்டப்படிதான் நடக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்பதுதான் முதலமைச்சரின் வழிகாட்டுதல். சமத்துவம் - சமதர்மம் என்ற கொள்கைகளுக்கு ஏற்ற வகையில்தான் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், பொதுக்கோயில் என்றுதான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்கோயில்களில் இருந்து புகார்கள் வரும்போது, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி புகாரின் மீது ஆய்வு செய்து விசாரிக்கலாம். அதன்படி புகார்கள் குறித்து ஆய்வு செய்யவே அலுவலர்கள் சென்றனர். எந்தவிதமான பயமும் இல்லை என்றால் ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களுக்கு வைக்கும் கோரிக்கை. பாரபட்சமின்றி விளக்கம் அளிப்பதுதான் சட்டப்படி உகந்ததாக இருக்கும்.
ஆய்வு நடத்துவது தீட்சிதர்களுக்கு எதிரான செயல் என்று நினைக்கக்கூடாது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கோயிலை எடுத்துக்கொள்ளும் குறிக்கோள் இல்லை. சட்டத்தை மீறி எந்தவிதமான செயலிலும் ஈடுபட மாட்டோம். புகாரின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வை நிச்சயம் மேற்கொள்ளும். தீட்சிதர்கள் ஆய்வுக்கு அனுமதிக்காவிட்டால், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய எம்.பி தயாநிதி மாறன், "சென்னை துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட சத்தியவாணி முத்து நகரில் கூவம் கரையோரமாக இருந்த 178 குடும்பங்களுக்கு புளியந்தோப்பு கே.பி. பூங்காவில் அந்த மக்கள் திருப்தி அடையும் வகையில் உரிய வசதிகளோடு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'எங்களுக்கும் பாய தெரியும்' - மதுரை ஆதீனத்திற்கு சேகர் பாபு பதிலடி