சென்னை: கரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் தொழிற்சாலைகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, இயல்பு நிலை திரும்பிய பிறகும் மீண்டும் பணி வழங்கப்படவில்லை எனக் கூறி, தொழிலாளர் விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்தவர் உள்பட ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், கரோனா பேரிடர் தொழிலாளர்களை மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தொழில் நிறுவனங்கள் பணியை தொடங்கிய பிறகும் கூட, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மறு நியமனம் வழங்கப்படவில்லை என பல வழக்குகள் தாக்கல் செயயப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சில நிறுவனங்கள் இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி, உரிய சட்டவிதிகளை பின்படுத்தாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதி, கரோனா பேரிடர் துரதிருஷ்டவசமானது என்ற போதும், அதை தொழிலாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
பணி வழங்காதது குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
தொழிலாளர்கள் சட்டவிதிகளை மீறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அரசு எந்த அறிவிப்பையோ, உத்தரவுகளையோ பிறப்பித்ததாக தெரியவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, கரோனா பேரிடர் காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்காதது குறித்து ஆய்வு செய்து, நவம்பர் 29ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையில், 2019ஆம் ஆண்டு ஜனவரியில் எத்தனை தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணியாறறினர் என்றும் கடந்த 27ஆம் தேதி எத்தனை தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!