சென்னை: மாநகராட்சி கோட்டூர் பகுதி 170ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் முத்தழகனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பரப்புரையில் ஈடுபட்டார்.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, வேட்பாளர் வழக்கறிஞர் எம்.ஏ. முத்தழன் ஆகியோருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
ஜனநாயகத்திற்குப் போராடும் கூட்டணி
பரப்புரையின்போது அதிமுக, பாஜகவை விமர்சனம் செய்தும், நீட் தேர்வை ரத்துசெய்வது குறித்தும் பேசினார். பரப்புரைக்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, "இந்தத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெல்லும், எங்களுடைய கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். எங்கள் கூட்டணியை மு.க. ஸ்டாலின் முறையாக வழிநடத்துகிறார்.
தமிழ்நாடு முழுவதும் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போட்டியிடுகிறது. கொள்கைக்காக ஜனநாயக ரீதியில் போராடும் கூட்டணி இது. இந்தத் தொகுதியில் முத்தழகன் 'கை' சின்னத்தில் நிற்கிறார்.
மக்களை மதம், சாதி என்ற அடிப்படையில் கொண்டு பிரிக்கக் கூடாது. நாட்டில் உள்ள அனைவரையும் இந்தியராகவும், மாநிலத்தில் உள்ளவர்களைத் தமிழர்களாகப் பார்க்க வேண்டும்.
'நீட்' தேர்வு
பாஜகவைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் 'நீட்'க்கு எதிராக உள்ளது. அரசியலுக்காக 'நீட்' வேண்டாம் எனச் சொல்லவில்லை, மாணவர் நலனுக்காக வேண்டாம் என்கிறோம். இதை மோடி அரசு மக்கள் உணர்வைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்வி கேட்கப்படுகிறது. எனவே, படிப்பது ஒன்றும் எழுதுவது ஒன்றாக உள்ளது.
வேளாண் சட்டம்போல 'நீட்'
நாடாளுமன்றத்தில் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் வேளாண் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இதை எதிர்த்து விவசாயிகள் இரவு பகலாகச் சாலையில் போராட்டம் நடத்தினார்கள்.
மேலும், காந்தி வழியில் நடத்தப்பட்ட போராட்டத்தால், எந்த ஒரு விவாதமும் இல்லாமல் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. வேளாண் சட்டம் எவ்வாறு திரும்பப்பெறப்பட்டது அதேபோல் நீட் சட்டமும் மீண்டும் திரும்பப் பெறப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீதியரசரின் உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்தும் ஆளுநர்- பேரவையில் அமைச்சர் மா சுப்பிரமணியன்