சென்னை: சுப்பிரமணிய சாஸ்திரி பொறுப்பேற்ற முதல் நாள் அடிப்படையில் மாநில காங்கிரஸ் 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ். அழகிரி, "மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் எனப் பெயர் வைக்கப்பட்டது. தமிழ்நாடு மதராஸ் மாகாணம் என்று இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ், கர்நாடக காங்கிரஸ் என மாநிலம் வாரியாக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மாநில காங்கிரஸ் ஏற்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இது காங்கிரஸ் கட்சியின் பெருமையைக் காட்டுகிறது" என்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு பாஜக இட ஒதுக்கீடு வழங்கியதாகக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. நேரு பிரதமராக இருந்தபோதே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
நாட்டில் அரசியல் சட்டம் முதல் முதலாகத் திருத்தப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தான், அதுவும் இட ஒதுக்கீடுதான் திருத்தப்பட்டது. கருணாநிதியின் புகைப்படத் திறப்பை அதிமுக புறக்கணித்தது தவறு. ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட சாதனைகளை மறுப்பது போன்று செயல்படக் கூடாது" என்றார்.
ஜெயலலிதாவின் புகைப்படத் திறப்பை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு, முதலில் கருத்து தெரிவிக்க மறுத்த கே.எஸ். அழகிரி பின்னர், அவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். அதில் சட்ட சிக்கல் இருந்தது என்பதால் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்ததாகப் பதிலளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைமை மாற்றப்பட உள்ளதாகச் செய்தி வெளியானது குறித்த கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம் என்றார்.
இதையும் படிங்க: மாவீரர்களின் நினைவு சதுக்கத்தில் அஞ்சலி செலுத்திய லெப்டினென்ட் ஜெனரல்