தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் முறையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
’விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நாம் தமிழர் இயக்கம்’
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு எனக் கூறி, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகள் தடை செய்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தடை நீட்டிப்பிற்குக் காரணம் விடுதலைப் புலிகள் அமைப்பு வன்முறையிலும், சீர்குலைவு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும், இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்துகிற வகையில் செயல்பட்டு வருவதே. ஆனால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது.
சீமானின் சட்டவிரோதப் பேச்சு
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது.
சீமான் தொடர்ந்து வன்முறையைத் தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் பேசி வருகிறார். இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீமானின் சட்டவிரோதப் பேச்சின் அடிப்படையில் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ”இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன், தேசியப் புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் பகுதிகளில் இவர் தங்கியிருந்த இடங்களில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், தமிழ்நாட்டிலிருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
வன்முறைப் பேச்சால் ஈர்க்கப்படும் இளைஞர்கள்
சற்குணனுக்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் அவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பாதிக்கப்படும்.
அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும் முறையிலும் செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை முளையிலேயே கிள்ளி எறியவில்லையெனில், அவரது வன்முறைப் பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தீவிரவாத பாதைக்குச் செல்ல நேரிடும். இந்தப் போக்கு தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதயத்தை உலுக்கிய காணொலி.. உடனடி கைது தேவை.. வருண் காந்தி!