சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 29) கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் விஜயகுமார் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனுவை அளித்தார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொளத்தூர் தொகுதியில் 'ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு' என்ற வாசகங்களும், ஸ்டாலினின் புகைப்படத்துடன் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட இரண்டாயிரம் டிஜிட்டல் விளம்பர போர்டுகளும், இரண்டு லட்சத்துக்கும் மேலான ஸ்டிக்கர்களும் எந்தவித அனுமதியும் பெறாமல் ஒட்டப்பட்டு உள்ளது.
'ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு' என்ற வாசகங்களை சமூகவலைதளங்களில் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இந்நிலையில் திமுக சார்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் போர்டுகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக உள்ளது" என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், இதை வேட்பாளர்களுக்கு கூட்டப்பட்ட கூட்டத்தில் தேர்தல் அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். எனவே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரத்திற்கும் மேலான விளம்பரப் பலகைகளையும், இரண்டு லட்சம் ஸ்டிக்கர்களையும் அகற்ற வேண்டும் என்றும், ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்த மார்ச் 15ஆம் தேதி முதல் விளம்பர பலகைகள், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை அகற்றும் நாள் வரை வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றார்.
இதைச் சோ்க்கும்பட்சத்தில் வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பை ஸ்டாலின் மீறுவதன் காரணமாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்யக் கோரியும் புகார் மனுவை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அலுவலர் கூறியுள்ளார் என்று விஜயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக வசம் சேருமா கே.வி. குப்பம்?