திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், இன்று காலை 11 மணியளவில் 100க்கும் மேற்பட்ட கண்ணகி நகர் பகுதி மக்கள், அக்கட்சியின் வட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் திடீரென கூடினர். இதைப்பார்த்து அதிர்ந்த தலைமை நிலையைச் செயலாளர் பூச்சி முருகன், அவர்களிடம் சென்று விவரம் கேட்டார். அதற்கு அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கரோனா காலம் என்பதால், இப்படி கூட்டம் கூட வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும் கோரிக்கை மனுவாக அளிக்கும்படியும் அவர்களிடம் பூச்சி முருகன் கூறினார். பின்னர் கண்ணகி நகர் மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அவரிடம் அளித்தனர்.
பின்னர் அம்மக்களிடம் நாம் பேசியபோது, “ சோழிங்கநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், கரோனா காலம் தொடங்கியது முதல் எந்த உதவியும் எங்களுக்கு செய்யவில்லை. எங்கள் பகுதிக்குக் கூட வந்து பார்வையிடவில்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவரிடம் கோரிக்கை வைக்க வந்தோம் ” எனத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களுக்கு தணிக்கை கோரிய வழக்கு - அவகாசம் வழங்கி உத்தரவு