காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் குளத்திலிருந்து ஆதி அத்திவரதர் சிலை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு 48 நாட்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மீண்டும் அத்தி வரதரை குளத்திலேயே வைத்து விடுவர். கடந்த 1979ஆம் ஆண்டு காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பிறகு தற்போது ஸ்ரீ அத்தி வரதரை வெளியே எடுத்து சிறப்பு பூஜை செய்யப்படவுள்ளது. இதற்காக தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆயிரம் ஆண்டுகளாக வரதராஜர் கோயிலை நிர்வகித்தும், பல்வேறு படையெடுப்புகளிலிருந்து பாதுகாத்தும் வந்த தத்தாச்சாரியார் குடும்பத்தினரே கோயில் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்ததாகவும், கடந்த 1991ஆம் ஆண்டிலிருந்து இந்து அறநிலையத்துறை தத்தாச்சாரியார் குடும்பத்தினரை அத்திவரதருக்கு பூஜைகள் செய்ய அனுமதி மறுத்ததாகவும், தத்தாச்சாரியார் குடும்பத்தினரை விலக்கி வைத்துள்ளதாகவும் அந்த குடும்பத்தை சேர்ந்த சம்பத் குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் பூஜை தொடர்பான விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை அறிக்கையாக வரும் 5ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.