தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன. அதன்படி, சென்னை பூவிருந்தவல்லி, போரூர் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று (டிசம்பர் 20) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "பரப்பரை செய்ய எனக்கு பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நீர் மேலாண்மையை மாநில அரசு கவனிக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி கோடையில் வரண்டும், மழைக் காலங்களில் சென்னையை வெள்ள காடாகவும் மாற்றி விடுகிறது. எம்ஜிஆர் புகைப்படத்தை ஸ்டாம்ப் வடிவில் அமைத்தவர்கள், தற்போது நான் வந்ததும் தொழில் கெட்டு விடுமோ என்று அதிமுகவினர் அச்சமடைகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. நான் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டால் முதலமைச்சருக்கு தூக்கமில்லாமல் போய்விடும்" என்றார்.