இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டொரோன்டோ தமிழ் இருக்கை குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்களின் வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில் கமலின் வாழ்த்துச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கமல் கூறியிருப்பதாவது:
கனடாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள். டொரான்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அமைக்க வேண்டும் என்று கனடாவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடி நிதி திரட்ட ஆரம்பித்தார்கள்.
தமிழ் இருக்கை அமைப்பதற்காக மூன்று மில்லியன் டாலர் நிதி வெற்றிகரமாகத் திரட்டப்பட்டுள்ளது. உலகம் முழுக்கப் பரவி வாழும் தமிழர்கள் பலர் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு நிதி அளித்துள்ளது ஓர் உணர்வுப்பூர்வமான தமிழ் எழுச்சியின் அடையாளம்.
உலக நாடுகளில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கிருந்தெல்லாம் தமிழ் இருக்கைக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியையும் அதற்குக் கிடைத்த வெற்றியையும் கனடா நாடாளுமன்றம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
டொரான்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைந்துள்ளது என்பது ஒவ்வொரு தமிழனும் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய தருணம்.
இந்த அரும்பெரும் முயற்சியைச் சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகளும் பாராட்டுகளும். நாளை நமதே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.