சென்னை: இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று முன்தினம் (செப். 12) நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம், 16.14 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் 1 லட்சத்தது 12 ஆயிரத்து 889 மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பத்திருந்தனர்.
நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை அளிக்கிறது என்றும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றும் பல தரப்பில் இருந்து நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவி அனிதா உள்பட பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தாண்டு இரண்டு மாணவர்கள்
அந்த வகையில், நீட் தேர்வு அச்சத்தால் இந்தாண்டு இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தேர்வுக்கு முன்னதாக (செப். 12) சேலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவரும், தேர்வுக்கு பின்னர் (இன்று) அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நீட் தேர்வு பயத்தால் மாணவர்களின் இந்த தொடர் தற்கொலை குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!" எனக் குறிப்பிட்டு, அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (செப். 13) நிறைவேறியது. இந்த மசோதா தற்போது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தமிழின் தொன்மையை கோயில்களில் தேட அரிய வாய்ப்பு' - அமர்நாத் ராமகிருஷ்ணா பெருமிதம்