”எழுந்து வா எழுந்து வா தலைவா”... லட்சக்கணக்கானோர் காவேரி மருத்துவமனைக்கு முன்பு நின்று கொண்டு எழுப்பிய இந்த முழக்கங்கள் என்றும் ஓயாது. தன் மனதுக்குள் சிம்மாசனம் போட்டு 50 வருடங்களுக்கும் மேலாக அமர்ந்திருந்த தலைவர் மருத்துவமனைக்குள் படுத்த படுக்கையாக இருக்கும்போது தொண்டர்கள் எழுப்பிய இந்த முழக்கங்கள் அனைவரையும் மிரள வைத்தது.
வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது தொண்டர்கள் இப்படி முழக்கங்கள் எழுப்பினர் சரி. ஆனால், அவர் உயிரிழந்த பிறகு ராஜாஜி ஹாலிலும், மெரினாவிலும் தொண்டர்களால் எப்படி இப்படி முழக்கங்களை எழுப்ப முடிகிறது என்று கேட்டால் அதற்கு ஒன்றே ஒன்றுதான் பதில், அதுதான் கருணாநிதி. ஏனெனில் அவர் உற்சாகம் இழக்காமல் கடைசிவரை தன்னையும் தன் தொண்டர்களையும் ஆக்டிவ்வாக வைத்துக்கொண்டார்.
உயிரிழந்தவரால் எழுந்து வர முடியாதுதான் இயற்கையில் அது சாத்தியமில்லைதான். ஆனால் அனைத்தையும் வென்ற தங்கள் தலைவரால் இந்த இயற்கையையும் வெல்ல முடியும் என தொண்டர்கள் நம்பினார்கள். அது சாதாரண விஷயமில்லை. அதற்கு காரணம் அசாத்தியம் என்ற வார்த்தைக்கு வாழ்ந்த காலம் வரை அவருக்கு அர்த்தம் என்பதே தெரியாது. எல்லாம் சாத்தியம்தான் என தனது சில பவுண்ட்ஸ் மூளையாலும், தன் பேனாவாலும் இந்திய அரசியல் அரங்குக்கு அவர் உரக்க சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஆழ்வார்ப்பேட்டை காவேரியில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி கர்நாடக காவிரி ஆற்றோரம் அனுமதிக்கப்பட்டிருந்தால் உடன் பிறப்புகளின் முழக்கங்களைக் கேட்டு எந்த வித பிரச்னையும் செய்யாமல் காவிரி முழுதாக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும். மெரினாவில் புதைக்கப்படும் இறுதி நிமிடங்களில்கூட ”எழுந்து வா தலைவா” என்ற குரலை உடன்பிறப்புகள் குறைக்கவே இல்லை. வங்கக்கடல் அலைகள் அன்று எழுந்து நின்று கைத்தட்டிக் கொண்டிருந்தன.
கருணாநிதி சந்திக்காத ஏற்றங்கள் இல்லை இறக்கங்கள் இல்லை. ஆனால் ஏற்றத்தை அவர் தனது தலையில் ஏற்றியது இல்லை இறக்கங்களின்போது அவர் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. சொல்லப்போனால் ஏற்றங்களைவிட இறக்கங்களில்தான் கருணாநிதி சுகம் கண்டவர். தனது ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட. “அப்பாடா ஒரு சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது” என்று சொல்லி கோபாலபுரத்துக்குள் எந்த விதமான சஞ்சலமும் இல்லாமல் நுழைந்தவர் அவர். கலைஞருக்கு கோபாலபுரத்துக்குள் நுழைவதும் ஒன்றுதான், கோட்டைக்குள் நுழைவதும் ஒன்றுதான், குடிசைக்குள் நுழைவதும் ஒன்றுதான். எங்கு நுழைந்தாலும் அங்கு புது பாதையை போட்டுவிட்டே நுழைவார். அந்த பாதை அவருக்கானது இல்லை அவரின் பின்னால் வருபவர்களுக்காக.
கருணாநிதி ஏராளமான வெற்றிகள் கண்டவர். ஆனால் அவரது ஒரு வெற்றி அனைவரையும் பிரமிக்க வைத்தது. அவர் அரசியலில் ஆக்டிவ்வாக இயங்கியபோது அவர் போல் எவரும் வசை சொற்கள் வாங்கியிருக்க முடியாது. அப்போதைய கால்நடை தலைமுறை தொடங்கி தற்போதைய இணைய நடை தலைமுறைவரை அவர் மேல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவர் உடல் நலிவுற்று படுக்கையில் விழுந்தபோது இணைய தலைமுறையினரே கருணாநிதி மீண்டும் வரவேண்டும் என எண்ணினர். தன்னை தூற்றியவர்களையும் இறுதிக் காலங்களில் தேட வைத்த அவரது அந்த வெற்றி யாருக்கேனும் வாய்க்குமா என்றால் பதில் இல்லை.
அவரைப்பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான்; ஓட வேண்டும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அரசியலில் ஒருவர் வனவாசம் அனுபவித்தார் என்றால் அவருக்கு அரசியல் முடிவுரை எழுதிவிட்டதென்று அர்த்தம். ஆனால், கருணாநிதி 13 வருடங்கள் ஆட்சியில் இல்லாதபோது அதை முடிவாக பார்க்காமல் தனக்கு கிடைத்த ஓய்வாக பார்த்தார். அந்த ஓய்வு என்பது ஆட்சிக் கட்டிலுக்கு மட்டும்தானே ஒழிய கட்சி கட்டிலுக்கு இல்லை. அந்தக் காலக்கட்டத்தில்தான் கருணாநிதி தீவிர பாய்ச்சல் செலுத்தினார். அந்தக் காலக்கட்டத்தில் அவரது கால்கள் பயணப்படாத கிராமங்கள் இல்லை. அவரது குரல் ஒலிக்காத மேடைகள் இல்லை. தொண்டர்களை உற்சாகப்படுத்தியே வைத்திருந்தார். அந்த உற்சாகம்தான் காவேரி மருத்துவமனையிலும், மெரினாவிலும் எதிரொலித்தது.
கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டின் அரசியல் சூழலும், இந்தியாவின் அரசியல் சூழலும் ஐசியூவில் இருக்கின்றன. அதனால்தான் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி மீண்டும் வரவேண்டும் என முதியோர்கள் முதல் இளைஞர்கள்வரை பேசிக்கொண்டே இருந்தனர். திமுக திண்ணையில் வளர்ந்தபோதும், இணையத்தில் வளர்ந்த போதும் தன்னை அங்கு நிலைநிறுத்தி அரசியல் செய்தார்.
சமூக வலைதளத்தில் அவர் கணக்கு தொடங்கியபோது, கருணாநிதியின் புதுப்புது அரசியல் கணக்குகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அனைவரும் திணறினர். ஏராளமான திட்டங்களுக்கு விதை போட்ட கருணாநிதிதான் இன்று தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திட்டத்திற்கும் விதை போட்டவர். அவர் சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் தொடங்கியது முதல் ஆச்சரியம் என்றால் நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு சளைக்காமல் பதிலளித்தது முதல் அதிசயம்.
தான் எழுதிய உடன்பிறப்புகள் கடிதமா, கவிதையா, கட்டுரையா எதையுமே அவர் அடித்து திருத்தியதே கிடையாது. முதல் வரியில் ஒரு தவறு செய்தால் அந்த தவறை சரிக்கட்டும் விதமாக அடுத்த வரியை அமைப்பது அவரது பழக்கம். அதேபோல்தான் அரசியலில் இதுவரை அவர் அடித்தல் திருத்தல் செய்ததே கிடையாது. அரசியலில் ஒரு தவறு செய்தால் அதை நேர்செய்ய அவரது அடுத்த மூவ் வேறுவிதமாக இருக்கும். அந்த மூவ் யாரும் எதிர்பார்க்காததாக இருக்கும்.
போராட்டம், போராட்டம் அதுதான் கருணாநிதி என்ற வார்த்தைக்கு அர்த்தம். இந்தி எதிர்ப்பு, எமர்ஜென்சி காலக்கட்டம், எம்.ஜி.ஆர் பிரிந்தது, சர்க்காரியா கமிஷன் ஏவப்பட்டது, வைகோ பிரிந்தது என அவர் எதிர்கொண்ட அனைத்து நில நடுக்கங்களையும், மன நடுக்கங்களையும் சர்வசாதாரணமாக கடந்துவிட்டு தனது ட்ரேட் மார்க் சிரிப்பையும், கர கர குரலையும் ஒலிக்கவிட்டு அமர்ந்திருந்தார். இறந்தபிறகும்கூட இட ஒதுக்கீட்டுக்காக போராடி அதில் வெற்றி பெற்றவர்தானே அவர்.
அனைத்து அரசியல்வாதிகள் மீதும் பலபேருக்கு கோபம் இருக்கும் ஆனால் கருணாநிதி மீதுதான் பலருக்கு வன்மம் இருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் அவர் சார்ந்திருந்த சாதி. அவரது கடைசி காலத்தில்கூட, ”தான் முதலமைச்சராக இருந்தாலும் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் சாதிய ரீதியாக தொடர்ந்து தாக்கப்படுகிறேன்” என மனம் நொந்து அவர் உதிர்த்த வார்த்தைகளுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் தலை குனிய வேண்டும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் முற்போக்கு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து அனைவரிடமும் விமர்சனத்தை மட்டுமே வாங்கிகொண்டிருந்தவர்.
கருணாநிதியை பொறுத்தவரை அவரிடம் பத்திரிகையாளர்கள் எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். எதற்கும் அசராமல் பதிலளித்துக்கொண்டே இருப்பார். அவரை பத்திரிகை உலகமும் தற்போது பயங்கரமாக மிஸ் செய்துகொண்டே இருக்கிறது.
ஈழ பிரச்னையில் கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் ஈழம் சர்வதேச அஜெண்டாவுக்குள் சென்றுவிட்டது என்பதையே அவர் மீது அவதூறு வைப்பவர்கள் லாவகமாக கடந்துசென்றுவிடுகின்றனர். அவர் ஈழத்துக்காக என்ன செய்தார் என்று கேட்பவர்களிடம், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது எதற்காக சம்பந்தமே இல்லாமல் திமுகவினரின் வீடுகள் தாக்கப்பட்டன என பதில் கேள்வி கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. ஏனெனில் விடுதலைப்புலிகளின் ஆதரவுக்கட்சி என்று திமுகவுக்கு அடையாளம் இருந்தது.
சமூக நீதி, மாநில சுயாட்சி போன்ற வார்த்தைகள் தற்போது அதிகளவில் எழத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் அந்த வார்த்தைகளை இந்திய அளவில் அதிகமாக புழக்கத்தில் விட்டது கருணாநிதிதான்.
அவர் உயிரிழந்தபோது அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மறுத்துவிட்டார். ஆனால், அதே ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார். அந்த உரிமையை பெற்றுக்கொடுத்தவர் தனது இறுதியான இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் வெற்றி பெற்று வங்கக்கடலோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். ஆம், தன்னை யாரெல்லாம் தூற்றினார்களோ. தன்னை யாரெல்லாம் அவமதித்தாரோ அவர்களுக்கும் சேர்த்தே அவர் ஓய்வில்லாமல் உழைத்தார்.
கருணாநிதி உயிரிழந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. இந்த ஒருவருடத்தில் எண்ணற்ற மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அவரது வெற்றிடத்திலும், அவரை தேடுபவர்களிடம் மட்டும் மாற்றமே இல்லை. இன்றுவரை அவரது நினைவிடத்திற்கு தொடர்ந்து பலர் படையெடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
படையெடுப்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கின்றனர். திமுக மீதும், கருணாநிதி மீதும் கொண்ட தீராத பற்று காரணமாக செல்பவர்கள் ஒரு வகையினர் என்றால்; கருணாநிதி வாழ்ந்த காலம்வரை அவர் மீது விமர்சனம் வைக்கிறோம் என்று அவரை வன்மம் கொண்டு பேசிவந்தவர்கள் தங்களது தவறுக்கு மன்னிப்பு கேட்கவும், அவருக்கு நன்றிக்கடனை செலுத்துவதற்கும் தற்போது கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்பவர்கள் இரண்டாம் வகையினர்.
தான் வாழும் வரை தன் மீது வசை மாரி பொழிந்த அனைவரையும் ஓய்வெடுக்காத சூரியன் எந்த வித கோபமும் கொள்ளாமல், சுட்டெரிக்காமல் வாஞ்சையோடு நிழல் கொடுத்தது. வன்மங்களை ஓய்வில்லாமல் எதிர்கொண்ட சூரியன் வங்கக்கடலோரம் ஓய்வெடுத்து அனைவருக்கும் இப்போதும் வாஞ்சையோடு நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த சூரியன் மீண்டும் வராதுதான் ஆனால் அந்த சூரியனின் வெளிச்சம் இச்சமூகத்தில் பீடித்திருக்கும் இருளை துளைத்துக்கொண்டே இருக்கும். கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி...