சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் கருணாநிதியின் மகள் செல்வி, மு.க. தமிழரசு, அருள்நிதி, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி, திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கி. வீரமணி, தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கி. வீரமணி, "மானமிகு சுயமரியாதைக்காரர் என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்து கொண்டவர் கருணாநிதி. மூன்றாம் ஆண்டு நினைவு நாள் என்பது நம்மைப் பொறுத்தவரை வரலாற்றுக் குறிப்பு நாள். அவரை நினைக்காத நாளில்லை.
கருணாநிதி 3ஆம் ஆண்டு நினைவு நாள்: 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டிகள்!
ஓய்வறியாமல் உழைத்தவர் கருணாநிதி. அந்த உழைப்பு தான் தற்போது தமிழ்நாட்டில் ஸ்டாலினை முதலமைச்சராக்கியது. அவர் மறையவில்லை, என்றும் மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து இருக்கிறார்.
எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றை திராவிடம் வெல்லும்; அந்த வரலாற்றை நாடு என்றென்றைக்கும் சொல்லும் என்ற உறுதிமொழியை ஏற்கிறோம்.
கருணாநிதி எந்தெந்த பணிகள் நடக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அந்த பணிகள் பெரியார் வழியிலேயே, அண்ணாவின் முறையிலேயே சிறப்பாக அந்தக் கொள்கைகளை அத்தனையும் நிறைவேற்ற சூளுரைத்த நாள் இன்றைய நாள். விட்ட பணி அனைத்தும் தொடரும்" எனத் தெரிவித்தார்.