சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று, அதிமுகவின் வி.வி.செந்தில்நாதன், சமூக சேவகர்கள் ஶ்ரீவித்யா, முத்துக்குமார், பத்திரிகையாளர் ஹேமலதா ஆகியோர், அக்கட்சியின் தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், "தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி.
வரும் 29 ஆம் தேதி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரைக்கு வருகிறார். அன்று கட்சியினருடன் கலந்துரையாடும் அவர், மறுநாள் 30 ஆம் தேதி, கட்சியின் பிரமாண்ட மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். முதலமைச்சர், அதிமுக நிர்வாகிகள் ஆகியோரை சந்திப்பது குறித்து நட்டா தான் முடிவு செய்வார்.
அதிமுக - பாஜக கூட்டணியில் பிரச்சனை ஏதுமில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக சந்தேகம் உள்ளவர்கள் கமிஷனில் புகார் தெரிவிக்கலாம்" என்றார்.
தொடர்ந்து, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி பேசும்போது, "ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செயல்பட்டனர். ஆனால், பிரதமர் மோடி தொடர்ந்து தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பெருமையாக பேசி வருகிறார்" என்றார்.
இதையும் படிங்க: ஆட்டோவில் சென்று வாக்கு கேட்போம், ஆட்டோ சின்னம் கேட்க மாட்டோம்! புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜூனமூர்த்தி