சென்னை: குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் ஜோதி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (60). அதே பகுதியில் கேட்டரிங் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் கிருஷ்ணவேணி, திருமணமாகி அதே பகுதியில் தனது கனவருடன் வசித்து வருகிறார்.
கிருஷ்ணன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கும்பகோணத்திலுள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வருவதாகவும், அதுவரை கடையை பார்த்துக்கொள்ளுமாறும் தனது மகள் கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளார்.
நகைகள் திருட்டு
இந்நிலையில், நேற்று (ஆக.23) கேட்டரிங் சர்வீஸ் கடையில் பணிகள் முடிந்தவுடன் கிருஷ்ணவேணி கடையை பூட்டிவிட்டு, தனது வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இன்று (ஆக.24) காலை கடையை திறக்க வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.
சிசிடிவி மூலம் விசாரணை
மேலும், கடையின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி காரையும் காணவில்லை. உடனடியாக கிருஷ்ணவேணி இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: லாரி உதிரிபாக கடைக்குள் புகுந்த திருடர்கள் - கையும் களவுமாகப் பிடித்த போலீஸ்